சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.81 திருக்கழுக்குன்றம்
பண் - நட்டபாடை
கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே
நின்ற பாவம் வினைகள் தாம்பல நீங்கவே
சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடங்
கன்றி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.
1
இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே
பிறங்கு கொன்றைச் சடையன் எங்கள் பிரானிடம்
நிறங்கள் செய்த மணிகள் நித்திலங் கொண்டிழி
கறங்கு வெள்ளை அருவித் தண்கழுக் குன்றமே.
2
நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்
தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்
காள கண்டன் உறையுந் தண்கழுக் குன்றமே.
3
வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி ஆடியை
முளிறி லங்குமழு வாளன் முந்தி உறைவிடம்
பிளிறு தீரப் பெருங்கைப் பெய்ம்மதம் மூன்றுடைக்
களிறி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.
4
புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்
இலைகொள் சூலப் படையன் எந்தை பிரானிடம்
முலைகள் உண்டு தழுவிக் குட்டி யொடுமுசுக்
கலைகள் பாயும் புறவில் தண்கழுக் குன்றமே.
5
மடமு டைய அடியார் தம்மனத் தேஉற
விடமு டைய மிடறன் விண்ணவர் மேலவன்
படமு டைய அரவன் றான்பயி லும்மிடங்
கடமு டைய புறவில் தண்கழுக் குன்றமே.
6
ஊன மில்லா அடியார் தம்மனத் தேஉற
ஞான மூர்த்தி நட்ட மாடிநவி லும்மிடந்
தேனும் வண்டும் மதுவுண் டின்னிசை பாடியே
கான மஞ்சை உறையுந் தண்கழுக் குன்றமே.
7
அந்த மில்லா அடியார் தம்மனத் தேஉற
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே
கந்தம் நாறும் புறவில் தண்கழுக் குன்றமே.
8
பிழைகள்தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன்
குழைகொள் காதன் குழகன் றானுறை யும்மிடம்
மழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை
குழைகொள் முத்தஞ் சொரியுந் தண்கழுக் குன்றமே.
9
பல்லில் வெள்ளைத் தலையன் றான்பயி லும்மிடம்
கல்லில் வெள்ளை அருவித் தண்கழுக் குன்றினை
மல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினாற்
சொல்லல் சொல்லித் தொழுவா ரைத்தொழு மின்களே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com